மதுரை ஆதீனமாக அருணகிரிநாதர் உள்ளார். இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்தார். இது பலத்த சர்ச்சையை கிளப்பியது. சென்னை ஐகோர்ட்டிலும், மதுரை கிளையிலும் வழக்குகள் தொடரப்பட்டன. மதுரை ஆதீனத்தை இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என, ஐகோர்ட் வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி மனு அனுப்பினார்.
மதுரை ஆதீனம், இந்து பொது மத நிறுவனம். அறநிலையத் துறை சட்டத்தின் கீழான பட்டியலில், மதுரை ஆதீனம் இடம் பெற்றுள்ளது. ஆதீனத்தின் தலைவராகவும், அறங்காவலராகவும் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். ஆதீனத்தின் நடவடிக்கைகளை நிர்வகிக்க, மதுரை ஆதீனம் அறக்கட்டளையை அருணகிரிநாதரும், நித்யானந்தவும் உருவாக்கியுள்ளனர். இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி, இது முறையானது அல்ல.இந்த அறக்கட்டளையை உருவாக்கிய பின், தனது வாரிசாக நித்யானந்தாவை நியமிப்பதாக, கர்நாடகாவில் உள்ள "நோட்டரி பப்ளிக்' முன், ஒரு மனுவை அருணகிரிநாதர் தாக்கல் செய்துள்ளார்.
ஆதீனத்தின் சொத்துகளை நிர்வகிக்க, தனது சட்டப்பூர்வ வாரிசாக செயல்பட, நித்யானந்தாவுக்கு தகுதியுள்ளது என்றும், இந்தச் சொத்துகளின் மீது அவருக்கு முழு உரிமை உள்ளது என்றும் மனுவில், அருணகிரிநாதர் கூறியுள்ளார்.குறிப்பிட்ட காரணங்களுக்காக தவிர, மற்றபடி மடத்தின் அறங்காவலரை நீக்க, சட்டத்தில் இடமில்லை. அறங்காவலர் பதவி காலியாகும் போது, வாரிசு உரிமையில் பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது உடனடியாக அந்த காலியிடத்தை நிரப்ப முடியாமல் போனாலோ, உதவி கமிஷனர் அதற்கான ஏற்பாட்டை செய்யலாம்.மதுரை ஆதீனத்தின் அறங்காவலராக அருணகிரிநாதர் மட்டுமே செயல்படுகிறார். தற்போது, மடத்தின் தலைவராக, ஆதீனகர்த்தராக செயல்பட, நித்யானந்தாவுக்கு சட்டப்பூர்வ உரிமையில்லை. அறங்காவலர் பதவி காலியானால் மட்டுமே, அவர் செயல்பட முடியும்.
0 comments :
Post a Comment