ராஜ்கோட், டிச.4: ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற போட்டியில் ரயில்வே அணிக்கு எதிராக ரவீந்திர ஜடேஜா 331 ரன்கள் குவித்தார். இதன்மூலம் முதல்தர போட்டிகளில் 3 முறை முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதன்மூலம் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஜடேஜா.
சவுராஷ்டிரா ஆல்ரவுண்டரான ஜடேஜா இதுபற்றி மேலும் கூறுகையில், ‘கடந்த ஆறேழு மாதங்களாக தேசிய அணியில் இல்லாத நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறேன். தற்போது முச்சதம் அடித்த பிறகு, களத்தில் நீண்ட நேரம் நின்று ஆட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறேன். மேலும், ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிக்கு நான் தகுதியானவன் என்பதையும் நிரூபித்திருக்கிறேன்.
தேசிய அணியில் இருந்து நிறுத்தப்பட்ட பிறகு, எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருந்தேன். இதற்காக கடுமையாக உழைத்தேன். ஒரு சீசனில் இரண்டு முச்சதம் அடிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில், அது அவ்வளவு எளிதானதல்ல. குஜராத் அணிக்கு எதிரான துவக்க ஆட்டத்தில் 303 ரன்கள் எடுத்தது எனது சிறப்பான ஸ்கோர் ஆகும்’ என்றார்.
0 comments :
Post a Comment