ஆஸ்திரேலியாவில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மழையால் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள நதிகளில் அபாய அளவைத் தாண்டி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில நதிகளில் வெள்ளப்பெருக்கெடுத்து நகரங்களுக்குள் புகுந்துவிட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் பிரிஸ்பேன் உள்ளிட்ட 30 நகரங்கள் கடுமையாகப் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சின்சில்லா,டால்பி, தியோடர் ஆகிய நகரங்களுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்த மூன்று நகரங்களையும் வெள்ளத்தால் பாதித்தவையாக அரசு அறிவித்துள்ளது. ஆல்பா,ஜெரிசோ, வாரா, பகுதிகளுக்குள் எந்த நேரத்திலும் வெள்ளம் புகலாம் என்ற அபாயகர நிலை உருவாகியுள்ளது. இதனால் இப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் வீடுகளை காலி செய்து கொண்டு பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் 1956-ல் வரலாறு காணாத வகையில் மழை பெய்தது. இதில் லட்சக்கணக்கான மக்கள் உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்டனர். அதையடுத்து இப்போதுதான் பலத்த மழை பெய்து வருகிறது. அங்குள்ள டேவ்சன் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 1956-க்கு பின்னர் இப்போதுதான் டேவ்சன் நதியில் இந்த அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நதிகளின் நீர்மட்ட அளவு வேகமாக உயர்ந்து வருகிறது. இதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். முடிந்த அளவுக்கு மக்களை பாதிக்காத வண்ணம் நீரை வேறு பகுதிக்குள் திருப்பிவிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வெள்ளம் பாதிப்பதை தடுக்க வழியே இல்லாத பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றி வருகின்றனர். மீட்புப் பணியில் லட்சக்கணக்கான பாதுகாப்புப் படை வீரர்களும், தன்னார்வத் தொண்டர்களும் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவியையும் செய்வதற்கு அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
0 comments :
Post a Comment