ஷார்ஜாவில் நிகழ்ந்த பாகிஸ்தானி கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப் பட்ட 17 இந்தியர்களும் கொலையான நபரின் நெருங்கிய உறவினருக்கு, நஷ்ட ஈட்டுத் தொகையை தர மறுத்து விட்டனர். "தாங்கள் அப்பாவி என்பதால், பணம் தரத் தேவையில்லை' என்றும் கூறியுள்ளனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் மிஸ்ரி நசீர் கான். கடந்த 2009 ஜனவரியில் ஷார்ஜா தொழிலாளர் முகாம் அருகே கொலை செய்யப்பட்டார். கள்ளச் சாராயம் விற்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக, ஷார்ஜா வில் வேலை பார்த்த பஞ்சாபை சேர்ந்த 16 பேர், அரியானாவைச் சேர்ந்த ஒருவர் என, 17 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த 17 பேருக்கும் இந்த ஆண்டு மார்ச் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஷார்ஜா கோர்ட் இந்தத் தண்டனையை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், மரண தண்டனையில் இருந்து தப்ப வேண்டும் எனில், கொலையான பாகிஸ்தானியின் நெருங்கிய உறவினருக்கு இவர்கள் 17 பேரும் நஷ்ட ஈட்டுத் தொகை தர வேண்டும். ஆனால், அதைத் தர இந்தியர்கள் 17 பேரும் மறுத்து விட்டனர். தங்கள் பக்கம் நியாயம் இருப்பதால், நஷ்டஈடு தொகை தர வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக இந்தியர்கள் 17 பேரின் வக்கீல் பிந்து சுரேஷ் செட்டூர் கூறுகையில், ""தண்டனை பெற்ற 17 பேரும் இழப்பீட்டுத் தொகை தர ஒப்புக் கொண்டால், அதை ஏற்றுக் கொள்ளத் தயார் என கொலையான பாகிஸ்தானியின் உறவினர் தெரிவித்தார். ஆனால், எனது கட்சிக்காரர்கள் அப்பாவி. அவர்கள் பக்கம் நியாயம் உள்ளது என்பதால், இழப்பீட்டுத் தொகை தர மறுத்து விட்டோம். பாகிஸ்தானி கொலைக்கும், அதற்கு பயன்படுத்திய ஆயுதத்திற்கும் இடையேயான தொடர்பை நிரூபிக்க போலீஸ் தரப்பினர் தவறி விட்டனர். கொலைக்கு பயன்படுத்தியதாக எந்த ஆயுதமும் இதுவரை கோர்ட்டில் ஒப்படைக்கப்படவில்லை,'' என்றார்.
0 comments :
Post a Comment