Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, May 5, 2013

தொடு திரை தொழில்நுட்பம் குழந்தைகளை பாதிக்குமா?

லண்டன்: தொடு திரை (டச் ஸ்க்ரீன்) வசதி கொண்ட ஸ்மார்ட் ஃபோன்களும், டேப்ளெட்டுகளும்(கையடக்க கணினி) சிறு குழந்தைகளின் கற்றலுக்கு நல்லது என்று புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் வேளையில், இக்கருத்தை சில விஞ்ஞானிகள் மறுக்கின்றனர்.
பொதுவாக சிறு குழந்தைகள் மணிக்கணக்கில் தொடுதிரை கணினிகள், கணினிகள், தொலைக்காட்சிகளின் முன்னால் செலவிடுவது தவறு என்றும், இதனால் அவர்களின் மூளையின் கற்றல் திறன் பாதிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் ஏற்கெனவே பரவலாக கவலைகள் வெளியிட்டு வரும் நிலையில், இந்த பிரச்சனை குறித்து விஸ்கான்ஸின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகள் இந்த கவலைகள் பெருமளவு தேவையற்றவை என்று கூறியிருக்கிறது.
பொதுவாகவே ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இயற்கையிலேயெ தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வதில் கூடுதல் ஆர்வம் இருக்கிறது. எனவே அந்த வயது குழந்தைகளின் கைகளில் ஒரு புதிய தொழில்நுட்பக் கருவியை கொடுத்தால், பெரியவர்களை விட இயல்பாக அந்த கருவியை ஆராய்ந்து அதை கையாள்வதில் அவர்கள் பெரும்பாலும் வெற்றி பெறுவார்கள். இந்த பின்னணியில் இரண்டு வயது குழந்தைகளிடம், தொடுதிரை கையடக்க கணினிகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்த விஸ்கான்ஸின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், குழந்தைகளின் கற்றலை இந்த தொடுதிரை கணினிகள் ஊக்குவிக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக தொடுதிரை கணினிகளில் இருக்கும் கேம் அதாவது விளையாட்டு அல்லது காணொளியானது இண்டர் ஆக்டிவ்வாக, அதாவது குழந்தை அதை தொடத்தொட வெவ்வேறு புதிய தகவல்கள், படங்கள், ஒலிகள் அல்லது காணொளிகள் வரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தால், அது, அந்த குழந்தைகளின் கற்றலை ஊக்குவித்து, குழந்தைக்கு உதவுகிறது என்று இந்த ஆய்வாளார்கள் தெரிவித்திருக்கிறார்கள்.இரண்டுவயது குழந்தையின் பார்வையில் இந்த தொடுதிரைகணினியின் விளையாட்டுக்கள் எவ்வளவுக்கெவ்வளவு இண்டராக்டிவ் ஆக இருக்கிறதோ அந்த அளவுக்கு குழந்தைக்கு இவை பிடிக்கின்றன என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த தொடுதிரைகளுடன் அதிகம் புழங்கும் குழந்தைகள் வேகமாக அதில் சொல்லப்படும் செய்திகளை உள்வாங்கிக்கொள்கின்றன என்று கூறுகிறார் இந்த ஆய்வு நடத்திய விஞ்ஞானிகளில் ஒருவரான மனித வளம் மற்றும் குடும்பநல படிப்புகளுக்கான துணைப் பேராசிரியர் ஹெதர் கிர்கோரியன்.மேலும் காண்களால் அறிவதில் மட்டுமல்ல, புதிய வார்த்தைகளை கற்பதிலும் இந்த தொடுதிரை கணினிகள் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு உதவுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். எனவே, தொடுதிரை கணினிகள் குழந்தைகளின் கற்றல் திறனுக்கு உதவுகிறதே தவிர, அதை எதிர்மறையாக பாதிக்கவில்லை என்கிறது இந்த ஆய்வு. ஆனால், இந்த ஆய்வின் முடிவுகளில் இருந்து மாறுபடுகிறார் குழந்தை மனநல மருத்துவர் அரிக் சிக்மன். தற்கால குழந்தைகள் திரைகள் முன்னால் மணிக்கணக்கில் செலவிடுவதாக கூறும் அரிக் சிக்மன், தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி, ஸ்மாட்ர்போன்கள் என்று சராசரியாக தற்கால குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் திரையின் முன்னால் செலவிடுவது அவர்களின் கற்றல் திறனை பாதிக்கிறது என்கிறார்.
இவரது அய்வில் தற்போது பிறக்கும் ஒரு குழந்தை ஏழு வயதாகும் போது அதில் ஒரு ஆண்டு காலத்தை திரைக்கு முன்னால் செலவிட்டிருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார். அதாவது இன்று பிறக்கும் குழந்தை தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி, ஸ்மார்ட்போன் என்று தினசரி அது ஏதோ ஒரு திரையின் முன்னாள் செலவிடும் மொத்த நேரத்தையும் கணக்கிட்டால், அந்த குழந்தைக்கு ஏழு ஆண்டு ஆவதற்குள், அது ஒரு ஆண்டை திரைக்கு முன்னால் கழித்திருக்கும் என்பது இவரது கணக்கு.
இது குழந்தைகளின் மூளைவளர்ச்சிக்கும், கற்றல் திறனுக்கும் நல்லதல்ல என்பது இவரது வாதம். இந்த வாதத்தை மறுக்கும் விஸ்கின்ஸான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், பெற்றோர்களுக்கு இரண்டு யோசனைகளை அளிக்கிறார்கள். முதலாவது, சிறுகுழந்தைகள் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக திரை முன்னால் இருக்க அனுமதிக்காதீர்கள் என்பது முதல் யோசனை. அதாவது, தொலைக்காட்சி, கணினி, தொடுதிரை கணினி என்று எல்லாவகையான திரைகளின் முன்பும் சேர்த்து குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணிகளுக்கு மேல் இருக்க அனுமதிக்கக் கூடாது என்பது முதல் யோசனை.
இரண்டாவது, தொடுதிரை கணினியில் இருக்கும் கேம்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் போன்றவற்றை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள். தொடுதிரைகணினியில் குழந்தை செலவழிக்கும் நேரத்தைப் போலவே, அது இந்த திரையின் முன்னால் என்ன செய்கிறது என்பதும் முக்கியம் என்பதை எல்லா விஞ்ஞானிகளுமே வலியுறுத்துகிறார்கள்.
தொடுதிரை என்கிற புதிய தொழில்நுட்பம் எதிர்கால தலைமுறையினரின் வாழ்வில் பிரிக்கமுடியாத அங்கமாக மாறிவருவதை சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், இதை தங்களின் குழந்தைகளுடைய நன்மைக்கு பயன்படுத்தும் ஒட்டுமொத்த பொறுப்பும் பெற்றோர்களின் கையிலேயே இருக்கிறது என்பதை வலியுறுத்துகிறார்கள்.

Reactions:

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!