ஆமதாபாத்: குஜராத் கலவரம் தொடர்பான ஆவணங்களை அந்த மாநில அரசும், சிறப்பு விசாரணைக்குழுவும் சேர்ந்து அழித்துவிட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத் கலவரம் தொடர்பாக விசாரிக்கும் நானாவதி கமிஷனுக்கு சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் பட் மேலும் கூறியிருப்பது: 2002-ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப்பின் குஜராத்தில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான முக்கிய ஆதாரங்களை மோடி தலைமையிலான மாநில அரசும், கலவரத்தை விசாரிக்க மாநில அரசு அமைத்த சிறப்பு விசாரணைக்குழுவும் அழித்துவிட்டன.
அதிகாரத்தில் உள்ள நபர்கள், சட்டத்துக்குமுன் விசாரணைக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக மிகவும் மோசமான இந்த காரியத்தை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக மாநில நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி, உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று சஞ்சீவ் பட் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக குஜராத்தில் கலவரம் நடந்தபோது, "ஹிந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிக்காட்டுவதைத் தடுக்க வேண்டாம்' என்று மோடி கூறியதாக, நானாவதி கமிஷன் முன்பு சஞ்சீவ் பட் சாட்சியம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment