டெல்அவீவ்: அரசு நிர்வாக சிறை (administrative detention) என்ற கருப்புச் சட்டத்தின் அடிப்படையில் விசாரணை இல்லாமல் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்ட ஃபலஸ்தீன் விடுதலை போராளி காதர் அத்னான் தனது 66 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
அத்னான் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டால் வருகிற ஏப்ரல் 17-ஆம் தேதி குற்றம் சுமத்தாமல் அவரை விடுதலைச் செய்வதாக இஸ்ரேலிய நீதி அமைச்சகம் உறுதியளித்தது. இதனை அத்னானின் வழக்கறிஞர்கள் அவரிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
33 வயதான அத்னான் இஸ்ரேலிய ராணுவத்தால் அநியாயமாக கைது செய்யப்பட்டு விசாரணை எதுவுமின்றி சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் விடுதலை கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். நாட்கள் செல்ல அத்னானின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவரது உயிருக்கு கூட ஆபத்து நேரும் என மருத்துவர்கள் எச்சரித்தனர். தனது மகளே தன்னை அடையாளம் காணமுடியாத அளவுக்கு அவரது உடல் நிலை மோசமடைந்தது.
இந்நிலையில் உலகின் மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் அவருடைய விடுதலைக்காக குரல் எழுப்பினர். ஃபலஸ்தீனில் அத்னானின் விடுதலையை கோரி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். அத்னானின் விடுதலை தொடர்பான மனு இஸ்ரேல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அத்னானின் விடுதலை குறித்து அறிவிப்பு வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் இம்மனுவை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment