டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலத்தவர் பயந்தோடும்படியும், அதேநேரத்தில் அத்தகைய அச்சுறுத்தலுக்குக் காரணமானவர்கள் முஸ்லிம்கள் என்கிறவாறும் பொய்ச் செதிகளைப் பரப்பியதற்காக இன்று தடை செய்யப்பட்டுள்ள இணையத் தளங்களில் 20 சதம் இந்து அடிப்படைவாத அமைப்புகளுடையவை என்கிறது இச் செய்தி.
முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வண்ணம் பொய்யாகத் திருத்தி அமைக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் இவை சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புக் கருத்துக்களைப் பரப்பின.
சீன ஆக்ரமிப்பிற்கு எதிராக தீக்குளிக்கும் திபெத்தியரின் படங்களை, “அஸ்ஸாம் மாநில இந்துக்களுக்கு எதிரான வங்கதேச முஸ்லிம்களின் வன்முறை” எனத் தலைப்பிட்டு வெளியிட்டன.
“வெளியிடப்பட்ட பல படங்களில் இத்தகைய உண்மைகளை வெளிப்படுத்தக் கூடிய பின்புலங்கள் வெட்டி நீக்கப்பட்டுள்ளன” என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார்.
புனே, பெங்களூரு, சென்னை முதலான இடங்களிலிருந்து வடகிழக்கு மாநிலத்தவர் பலரும் ஓடுவதற்குக் காரணமாக இருந்த குறுஞ்செய்திகள் பலவும் கூட இத்தகைய அமைப்புகளாலேயே கொடுக்கப்பட்டிருந்தன.
“தங்களது வெறுப்பு அரசியல் நோக்கத்திற்காகப் பலரும் அஸ்ஸாம் பிரச்சினையைப் பயன்படுத்திக் கொண்டனர். வலது சார்புடைய இந்து அமைப்புகள் இதில் பெரும்பங்கு வகித்தன” என்ரார் ஒரு அதிகாரி. அஸ்ஸாமிய போடோக்கள் அனைவரும் இந்துக்கள் என அவர்கள் பரப்பிய செய்தியும் முழு உண்மையன்று. போடோக்களில் கிறிஸ்தவர்களும் உள்ளனர்.
பெங்களூரிலிருந்து பலரும் ஓடுவதற்குக் காரணமாக இருந்த, ‘நான்கு வடகிழக்கு மாநிலத்தவர் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு எதிராக ஃபட்வா ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது’ எனப் பரப்பட்ட செய்தியும் இத்தகைய வலதுசாரி இந்து அமைப்புகளுடைய வேலையாகவே இருக்கலாம் எனச் சந்தேகம் உள்ளது.
பெங்களூரில் ரயில் ஒன்றில் மூன்று பெண்கள் குண்டு வைக்கத் திட்டமிட்டதாகப் பரப்பப்ப்ட்ட செய்தி பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரால் பதியப்பட்டது என்பது பின்னர் வெளியாகியது.
சுதந்திர தினத்தன்று ஐதராபாத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றிக் கொண்டாடப்பட்டது என்றொரு செய்தி பரப்பப்பட்டது நினைவிருக்கும். இந்திய முஸ்லிம்களின் தேசபக்தியைச் சந்தேகிக்கும் நோக்குடன் இச்செய்தி பரப்பப்பட்டது. இந்த ‘ஐதராபாத்’ பாகிஸ்தானிலுள்ள ஐதராபாத் என்பதும், அங்கு ஏற்றப்பட்ட கொடி தொடர்பான வீடியோ காட்சிதான் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரிசாவில் மருத்துவப் பணி ஆற்றிக் கொண்டிருந்த மருத்துவர் கிரஹாம் ஸ்டெய்ன்சையும் அவரது இரு குழந்தைகளையும் உயிருடன் எரித்துக் கொன்ற தாராசிங்கிற்கு ஆதரவான இன்னொரு இணையத் தளம், அஸ்ஸாம் கலவரத்திற்குக் காரணம் கிறிஸ்தவ மிஷனரிகள் எனவும், அவர்களே போடோக்களுக்கு ஆயுதங்களை அளித்தார்கள் எனவும் பொய்ச் செய்தியைப் பரப்பியது.
“வலது அமைப்புகள் பலவும் வடகிழக்கில் கால் பதிக்க விரும்புகின்றன. பழங்குடியினரைத் தம் பக்கம் ஈர்க்க விரும்புகின்றன. இன்றைய பிரச்சினையை அவை இந்த நோக்கில் பயன்படுத்த முயற்சிக்கின்றன. இந்தியர்களுக்கு எதிராகப் புலம் பெயர்ந்த முஸ்லிம்கள் என்பதாக ஒரு பிரச்சாரத்தைச் செய்து அரசியல் லாபம் பெற முயல்கின்றன” என அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
ஆர்.எஸ்.எஸ் முதலான தீவிரவாத இந்து அமைப்புகள் பலவும் பயந்தோடிய வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு உணவு முதலியவற்றை வழங்கின. பஜ்ரங்தளம் அஸ்சாமில் கலவரப் பகுதிகளில் கடை அடைப்பிற்கும் அழைப்பு விடுத்தது.
0 comments :
Post a Comment