புதுடெல்லி: சாலை மற்றும் பொது இடங்களில் சிலைகளை நிறுவுதல் மற்றும் இதர கட்டுமானங்களை மேற்கொள்ள மாநில அரசுகள் அனுமதி அளிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றங்கரையில் தேசிய நெடுஞ்சாலையில், மறைந்த காங்கிரஸ் தலைவர் என்.சுந்தரத்தின் சிலையை நிறுவ கேரள அரசு அனுமதியளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்
தொடரப்பட்டது.
இது தொடர்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம். லோதா, எஸ்.ஜே. முகோபாத்யாய ஆகியோரடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை வழங்கிய தீர்ப்பு:
பொது இடங்கள், சாலைகள், பொது மக்கள் பயன்பாட்டுக்கான இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் சிலை மற்றும் இதர கட்டுமானங்களை மேற்கொள்ள கேரள அரசு அனுமதி வழங்கக் கூடாது. போக்குவரத்து வசதிக்காக தெருவிளக்கு போன்றவற்றை நிறுவுவதற்கு எவ்வித தடையுமில்லை.
இந்த உத்தரவானது, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, சிலையை நிறுவ அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்றும், பணிகளை நிறுத்திவைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கேரள அரசுக்கு உத்தரவிட்டனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது: பொது மக்களின் நலனே முக்கியம். ஒவ்வொரு குடிமகனும் சாலையில் எளிதாக நடக்க உரிமை உண்டு. சாலைகள் மற்றும் பொதுஇடங்களில் சிலைகளை நிறுவுதல், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை அமைப்பதன் மூலம் அந்த உரிமை பறிக்கப்பட்டு விடக்கூடாது. சட்டம்- ஒழுங்கு பிரச்னை வராமல், சாலைகளில் இடையூறாக உள்ள வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்பட வேண்டும்.
குறிப்பிட்ட ஒருவருக்கு புகழ் சேர்க்க மக்களின் பணத்தை ஏன் பயன்படுத்த வேண்டும்? அந்த நிதியை ஏழைகளின் மேம்பாட்டுக்காகச் செலவிடலாமே என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
0 comments :
Post a Comment