வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை,கட்டட வேலை,தோட்டம், பெட்ரோல் பம்ப் போன்ற வேலைகளுக்கு சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து அதிகமானோர் செல்கின்றனர்.
அங்குசெல்ல, ரூ.80 ஆயிரம் முதல் ஒன்றரை லட்சம் வரை ஏஜன்ட்களிடம் கொடுக்கின்றனர். ஆனால், இவர்களுக்கு ஏஜன்ட்கள் சொல்லி அனுப்பும் வேலையோ, வேலை நேரமோ, சம்பளமோ, தங்கும் இடமோ, சாப்பாடு வசதியோ, விடுமுறையோ கிடைப்பது இல்லை. சுமார் 30 சதவீதம் பேர் கொத்தடிமைகளாக வேலை வாங்கப்படுகின்றனர். இவர்களுடைய பாஸ்போர்ட்களை முதலாளிகள் வைத்துக் கொண்டு, இவர்களை ஊர் திரும்ப அனுமதிப்பதில்லை.
இவர்களது உறவினர்கள் ,"வீட்டில் தாய், தந்தைக்கு உடல்நலம் சரியில்லை; மகனை ஊருக்கு அனுப்பி வையுங்கள்,' என்று கெஞ்சி "பேக்ஸ்' அனுப்பி வருகின்றனர். கடந்த ஓராண்டாக, வளைகுடா நாடுகளுக்கு இது போன்று தினமும் நூற்றுக்கணக்கான "பேக்ஸ்'கள் அனுப்பப்படுகின்றன. அங்குள்ள நமது தூதரகங்கள் தமிழர்களை மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்புவதில் பாராமுகமாக இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. அண்மையில், குவைத்தில் உடல்நலமில்லாத திருப்புத்தூர் பகுதி வாலிபர் ஒருவரை மீட்க, தூதரகம் தலையிட்டும் 3 மாதங்கள் ஆகி விட்டன.
முன்பு, இப்பிரச்னையை சமாளிக்க, மத்திய அரசு "பிலிப்பைன்ஸ் நாட்டைப் போல' ஒரு திட்டம் தயாரிக்க முடிவு செய்தது. பிலிப்பைன்ஸ் நாட்டவருக்கு வளைகுடா நாடுகளில் வேலை பார்க்க, அந்நாடு ரூ.16 ஆயிரம் குறைந்த பட்ச சம்பளமாக நிர்ணயித்து உள்ளது. இந்தியத் தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச சம்பளத்தை நிர்ணயிக்கவும், வேலை நேரம், விடுமுறைகளை வரையறுக்க சவுதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரசு குடியரசு, கத்தார், பக்ரைன், ஏமன், குவைத் மற்றும் சிரியா,லெபனான் போன்ற நாடுகளை வலியுறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு முன் வந்தால் தான், வெளிநாட்டில் கொத்தடிமையாகும் இந்தியர்களின் நிலை மாறும்.
0 comments :
Post a Comment