Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, March 25, 2011

உணவு கட்டுப்பாடும், உடல் பயிற்சியும், அவசியமான ஒன்று?

எடையைக் குறைக்க உண்ணும் பழக்க வழக்கங்களையும், உடற் பயிற்சியையும் கவனித்தாலே போதுமானது.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் செய்ய வேண்டியவைகள்:

1. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

2. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து அதிகம் உள்ள உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

3. காபி, டீ அதிகம் குடிக்கக் கூடாது.

4. பச்சைக் காய்கறிகள், கீரை, பழ வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

5. இரவு உணவை 8 மணிக்குச் சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அப்படி சாப்பிட முடியாதவர்கள் இரவு உணவை பச்சைக் காய்கறிகள், பழங்கள் என மாற்றிக் கொள்ள வேண்டும்.

6. படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னரே இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டும்.

7. இனிப்பு, புளிப்பு உள்ள உணவு வகைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

8. தினமும் 30 முதல் 45 நிமிஷங்கள் வரை நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

9. முடிந்த அளவு பகலில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

10. பாஸ்ட்புட், ஐஸ்கிரீம், சாக்லேட் உள்ளிட்ட நொறுக்குத் தீனி அதிகம் கூடாது.

மூடப்படும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம்?

கொழும்பு, மார்ச் 25: இலங்கையின் வடக்குப் பகுதியிலிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் இப்போது மூடப்பட்டுள்ளது.

இலங்கையில், விடுதலைப்புலிகளுடன் பிரச்னையை துவங்கியபோது 1987-ல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வவுனியாவில் துவங்கப்பட்டது. 2009-ல் விடுதலைப்புலிகளுடன் நடந்த போருக்குப் பின்னர் பல்வேறு செஞ்சிலுவை சங்கங்கள் மூடப்பட்டுவிட்டன.

ஆனாலும் வவுனியாவில் இருந்த சங்கம் மட்டும் தொடர்ந்து இயங்கி வந்தது. இந்த நிலையில் இந்த சங்கம் இப்போது மூடப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து மட்டும் செஞ்சிலுவை சங்கம் செயல்படவேண்டும் என்று இலங்கை அரசு கேட்டுக்கொண்டது. இதையடுத்து வவுனியாவில் இருந்த செஞ்சிலுவைச் சங்கம் மூடப்படுகிறது.

அனைவரும் ஏற்கும் தீர்வை விரும்புகிறோம் - ராஜபட்ச: தமிழர்கள் பிரச்னையில் அனைவரும் ஏற்கும் தீர்வை மட்டுமே விரும்புகிறோம் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச கூறினார். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: தமிழர்கள் பிரச்னை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டணிக் கட்சியினருடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அனைவரும் ஏற்கக்கூடிய சிறந்தத் தீர்வை அடைவதே எனது குறிக்கோள்.

விடுதலைப்புலிகளின் கோரிக்கையான தனி நாடு என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. 60 ஆண்டுகளாக இந்த பிரச்னை நீடித்து வருகிறது. இதை மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவேண்டும். தமிழ் தேசிய கூட்டணியுடன் இதுவரை 3 சுற்று பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு, தமிழ் தேசிய கூட்டணியுடன் பேச்சு நடத்தி வருகிறது என்றார் அவர்.

சிறுவனுக்கு துப்பாக்கி லைசென்ஸ்! கலிகாலம போச்சு?

லண்டன் : பிரிட்டனில் 7 வயது சிறுவனுக்கு துப்பாக்‌கி லைசென்ஸ் வழங்கியுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்நாட்டிலிருந்து வெளிவரும் ஒரு முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் பிரிட்டனின் தகவல் பெரும் சுதந்திர சட்டத்தின் கீழ் , பிரிட்டனில் படைப்பிரிவில் துப்பாக்கி லைசென்ஸ் தொடர்பான விவரங்களை கேட்டிருந்தது. பிரிட்டனில் உள்ள குளுசெஸ்டர்ஸ் மாகாணத்தில் 7 வயது சிறுவனுக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்கியிருப்பதும், அதே மாகாணத்தில் மேற்குமெர்ஸியா போலீஸ் நிலையத்தில் 8 வயது சிறுவன் துப்பாக்கி லைசென்ஸ்ஸிற்காக மனு செய்திருப்பதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும் பல விபரங்கள் கேட்டதில் கடந்த 2008-2010 ஆண்டுகால கட்டத்தில் 10வயது பூரத்தியான 12 சிறுவர்களுக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்கியிருப்பது தெரிவந்தது. மேலும் விவரங்களை சேகரித்ததில் 18 வயதிற்கு குறைந்த டீன்ஏஜ்கள 7 ஆயிரத்து 71 பேருக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது. பிரிட்டனில் டீன்ஏஜ் குற்றங்கள் பெருகி வரும் நிலையில் விவரம் அறியாத சிறுவர்களுக்கு துப்பாக்கி லைசென்‌ஸ் வ‌ழங்கியிருப்பது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது

சிறப்பான வரவேற்பு, ஜெயாவுக்கு!

திருச்சி : இலவசங்கள் மூலம் மட்டுமே மக்களை கவரும் நிலையில் அ.தி.மு.க., இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மக்களிடையே அ.தி.மு.க.,விற்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. எனவே இலவசங்கள் மூலம் மட்டுமே அ.தி.மு.க., வாக்காளர்களை கவர நினைப்பதாக கூறுவது தவறானது என்று தெரிவித்துள்ளார்.

அழகிரிக்காக கட்சை கட்டிய, குஷ்பு!

மதுரையில் நடிகை குஷ்பு. தேர்தல் பிரசாரத்துக்காக இன்று வெள்ளிக்கிழை காலை மதுரை வந்தார் குஷ்பு. அவர் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இல்லத்துக்கு சென்று அவருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

பின்னர் பிரசாரம் வியூகம் குறித்து சுமார் 1 மணி நேரம் அவருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவருடன் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு உடன் இருந்தார். மதுரை மேற்கு தொகுதி திமுக வேட்பாளரர் கோ. தளபதியை ஆதரித்து வெள்ளிக்கிழமை காலை நடிகை குஷ்பு மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் திறந்த வெளி வேனில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது, முதல் அமைச்சர் கருணாநிதி தேர்தல் அறிக்கையில் அழகான கதாநாயகியை உருவாக்கி உள்ளார். கடந்த தேர்தலில் தேர்தல் அறிக்கையில் கூறியபடி இலவச டி.வி., கேஸ் வழங்கி உள்ளார். இந்த தேர்தல் அறிக்கையில் மிக்ஸி, கிரைண்டர், தருவதாக கூறியுள்ளார். சொல்வதை செய்பவர்தான் முதல்வர் கருணாநிதி. மீண்டும் அவர் தமிழகத்தில் முதல்வராவது உறுதி.

முதல்-அமைச்சர் கருணாநிதி, மத்திய அமைச்சர் அழகிரி ஆசிபெற்ற வேட்பாளர் தளபதிக்கு வருகிற தேர்தலில் ஆதரவு தரவேண்டும். தேர்தல் அறிக்கையில் கூறியபடி 35 கிலோ இலவச அரிசி, 58 வயது முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ், வீடு தேடு வரும் மருத்துவம் போன்ற நல்ல திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கப்போகிறது எனக் குஷ்பு தனது பிரச்சாரத்தில் பேசினார்.

Thursday, March 24, 2011

ஜெ,யின் வாக்குறுதி, அரசியல் ஸ்டேண்ட்?

- வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும்.

- 6 கிராமங்களில் 60 ஆயிரம் பால் கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்படும்.

- கரும்பு கொள்முதல் விலையை ரூ.2500 ஆக அதிகரிக்க நடவடிக்கை

- வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வீடுகளுக்கு சூரிய ஒளி மின்சாரம் இலவசம்

- கிராமப்புற தெரு விளக்களுக்கு சூரிய மின்சாரம்

- மீனவர் பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.

- மீனவர்கள் நலனுக்காக கப்பல் பூங்கா அமைக்கப்படும்.

- மீனவர் குடும்பத்திற்கான உதவித் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்.

- தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் அரசுடமையாக்கப்படும். அரசு மானியத்தில் குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி வழங்கப்படும்.

- இலங்கை அகதிகள் அனைவரும் தமிழகத்திலேயே கெளரவமாக வாழ நடவடிக்கை எடுக்கப்படும்.

- கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் நலன்கள் காக்கப்படும்.

திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள பல அறிவிப்புகள் இதிலும் உள்ளன.

அதேசமயம், திமுக திட்டங்களின் விரிவாக்கமாக இவை அமைந்துள்ளது.

ஆனால் இரு கட்சிகளும் இரண்டு முக்கிய பிரச்சனைகளை மறந்தே விட்டன.
அவை, 1.வேலை வாய்ப்பு, 2.விலைவாசி உயர்வு.

இலவசங்களை வழங்கியே தமிழக மக்களை சோம்பேறிகளாகவும், கையேந்துபவர்களாகவும் மாற்றுவதுதான் இரண்டு கட்சியினரின் நோக்கமாகும். இதனை தமிழக வாக்காளர்கள் புரிந்துக் கொள்வார்களா?

சிறுபான்மை சமுதாயத்தை மறந்த ஜெ.?? ஈழத்திற்காக ஒரு அறிக்கைகூட அறிவிக்காத, ஜே, ஆட்சிக்கு வந்து என்ன செய்யப்போகிறார். எல்லாம் ஓட்டுக்காகவே.

இன்ஜினியரிங் படித்தவரா? ஜெர்மனியில் வரவேற்பு!

பெர்லின் : வெளிநாடுகளை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக ஜெர்மன் நாட்டின் சட்டதிட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு.

ஜெர்மன் நாட்டில் இன்ஜினியரிங் மற்றும் அதன் தொடர்புடைய பணிகளுக்கு சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பற்றாக்குறையாக காணப்படுகிறது. இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அதிபர் ஏஞ்சலா தலைமையிலான அரசு வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக அந்நாட்டின் சட்டதிட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி படித்த இளைஞர்கள் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உடனடியாக அந்நாட்டில் பணிபுரியத்தக்க வகையில் சட்டங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மாற்றம் உடனடியாக பார்லி மென்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பணம் வாங்கினாலும், கொடுத்தாலும் கைக்கு வரும் காப்பு?

சென்னை : ஓட்டுக்கு பணம் கொடுத்தால் மட்டுமல்ல,ஓட்டுக்காக பணம்,பரிசுப் பொருட்கள் வாங்கினாலும் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தில் வழக்கு பதியப்படும் என, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.

‘ஓட்டுகளை விற்காதீர்; பணம் வாங்காதீர்’ என்ற கோஷத்துடன் கூடிய வாக்காளர் விழிப்புணர்வு பாடலை, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டார். இளைஞர் எக்ஸ்னோரா அமைப்பு சார்பில், இந்த பாடல் ‘சிடி’ வெளியிடப்பட்டது. பின், தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அளித்த பேட்டி: பணம் வாங்காதீர்; ஓட்டுகளை விற்காதீர் என,விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோ கண்காணிப்பு, பறக்கும் படை, தேர்தல் மேற்பார்வையாளர்கள் என, பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். எங்கெங்கு புகார் வருகிறதோ, அங்கெல்லாம் எங்கள் அதிகாரிகள், ‘ரெய்டு’ நடத்துகின்றனர்.

ஓட்டுக்கு பணம் அல்லது பரிசு கொடுப்பது மற்றும் தேர்தல் விதிமீறல்கள் தெரிந்தால், அதை யார் வேண்டுமானாலும் மொபைல் போனில் புகைப்படம் எடுத்து, ஆதாரமாக தரலாம்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம், பரிசு தருவதாக புகார் எழுந்ததால், அவர்களை கண்காணித்து வருகிறோம். தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் ஓட்டு இயந்திரங்கள் தயாராக உள்ளன. இதற்குத் தேவையான மாற்று இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. பாரபட்சமாக செயல்படும் போலீஸ் அதிகாரிகள் மீது புகார் வந்தால், அதை கலெக்டர்கள் எங்களுக்கு அனுப்புவர். பின், இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓட்டுக்கு பணம்,பரிசு கொடுத்தால் வழக்கு பதிவு செய்வோம். அதேபோல், ஓட்டுக்காக பணம்,பரிசு வாங்கினால் சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் மீது, லஞ்ச ஒழிப்பு சட்டத்தில் வழக்கு பதியப்படும், என்றார்.

‘ஓட்டுக்கு பணமோ, பரிசோ வாங்குவது குற்றம். பணம், பிரியாணி, மது பாட்டில் போன்றவற்றுக்காக ஓட்டை விற்றால், அடுத்த ஐந்து ஆண்டுகள் உங்களுக்கு வீணாகி விடும். எனவே நல்லவர்களை, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுங்கள்’ என்றார்.

பா​.ஜ.க, தனியார் சேனலும் திட்டமிட்டு விரித்த வலை?

புதுடெல்லி:அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக எம்.பிக்களுக்கு லஞ்சம் அளித்ததாக கூறும் விவகாரத்தை பா.ஜ.கவும், ஐ.பி.என் – சி.என்.என் தொலைக்காட்சி சேனலும் திட்டம் தீட்டி விரித்த வலை என டெஹல்கா வெளிக் கொணர்ந்துள்ளது.

விக்கிலீக்ஸ் வசமிருக்கும் அமெரிக்கா தூதரகம் அனுப்பிய ரகசியத் தகவல்கள் அடங்கிய இந்தியா தொடர்பான கேபிள் செய்திகளை ‘தி ஹிந்து’ பத்திரிகை வெளியிட்டு வருகிறது. இச்செய்தியில்தான் காங்கிரஸ் எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் வெளியானது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகிறது பா.ஜ.க.

இந்நிலையில் டெஹல்காவில் வெளியான செய்தியானது௦ காங்கிரஸிற்கு பா.ஜ.கவுக்கு எதிரான தற்காப்பு ஆயுதமாக மாறியுள்ளது. பா.ஜ.கவின் மூத்ததலைவர் எல்.கே.அத்வானி,மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் அருண் ஜெட்லி, சுதீந்தர் குல்கர்னி ஆகியோரின் ஆதரவுடன் சி.என்.என்.-ஐ.பி.என் சேனலுடன் இணைந்து நடத்திய ரகசிய கேமரா ஆபரேசனின் மோசடியை டெஹல்கா வெளிப்படுத்தியுள்ளது.

இதுத் தொடர்பான 10 தொலைபேசி உரையாடல்களின் ஆவணங்களை டெஹல்கா தம் வசம் வைத்துள்ளது.

BJPMPAshokArgal_Call_1., BJPMPAshokArgal_Call_2

சி.என்.என்.-ஐ.பி.என் தொலைக்காட்சிக்காக கேமரா ஒளிப்பதிவுக்கு தலைமை வகித்த செய்தியாளர் சித்தார்த் கவுதம் வெளியிட்ட தகவல்களுடன் டெஹல்கா இதனை தெரிவித்துள்ளது.

ரகசிய ஆபரேசனுக்கு கவுதமிற்கு கட்டளை பிறப்பித்தவர் பா.ஜ.கவின் மாநிலங்களவை தலைவரான அருண் ஜெட்லியாவார். சுதீந்தர் குல்கர்னி சேனல் குழுவினருக்கு தேவையான வசதிகளை செய்துக் கொடுத்துள்ளார்.

ரகசிய கேமரா ஆபரேசனுக்கு பிறகு எல்.கே.அத்வானி நேரடியாக கவுதமை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார். அசோக் அர்கார்,ஃபகான் சிங் குல்ஸ்தே,மகாவீர் பகோரா ஆகிய பா.ஜ.க எம்.பிக்கள் ரகசிய கேமரா ஆபரேசனில் பங்கேற்றுள்ளனர்.

சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அஹ்மத் பட்டேல் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் அமர்சிங் ஆகியோரை இந்த ரகசிய கேமரா ஆபரேசனில் சிக்கவைக்க திட்டமிட்டப் பொழுதும் அவர்கள் அதில் சிக்காமல் தப்பிவிட்டனர்.

இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக 2008 ஜூலை 22-ஆம் தேதி பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான விவாதத்தின்போது பாராளுமன்ற அவையின் நடுவே பா.ஜ.க எம்.பிக்கள் பண கட்டுகளுடன் வந்து தங்களுக்கு லஞ்சமாக வழங்கப்பட்டது எனக்கூறி உயர்த்தி காண்பித்தனர்.

இச்சம்பவம் இந்திய தேசத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க சமாஜ்வாதி கட்சியின் அமர்சிங் அளித்த லஞ்சப் பணம் என அவர்கள் குறிப்பிட்டனர். லஞ்சப் புகாரை விசாரித்த கிஷோர் சந்திரதேவ் கமிட்டி அமர்சிங்கையும், அஹ்மத் பட்டேலையும் குற்றமற்றவர்கள் என கூறியது.

நேற்று பாராளுமன்றத்தில் டெஹல்காவின் அறிக்கையை உயர்த்திக்காட்டி பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்ஸால் பிரதமருக்கெதிரான பா.ஜ.கவின் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜ.க தலைமையின் ஆசீர்வாதத்துடன் சேனல் இந்த ரகசிய கேமரா ஆபரேசனை நடத்தியதாக பன்ஸால் தெரிவித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.பிக்களுக்கு காங்கிரஸோ,சமாஜ்வாதிக் கட்சியோ எம்.பிக்களை விலைக்கொடுத்து வாங்கவில்லை என டெஹல்கா தெரிவித்துள்ளதாக பன்ஸால் தெரிவித்தார்.

ஜெ, க்கு செருப்பு வீசப்பட்டதா?

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெ., இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது இவருடன் வந்த அ.தி.மு.க., தொண்டர்கள் மீது செருப்பு வீசப்பட்டதால் .அ.தி.மு.க., - தி.மு.க., தொண்டர்கள் மோதும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர்.

அ.தி.மு.க., பொதுசெயலர் இன்று வேட்பு மனுத்தாக்கல் ஜெ., தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். 11 மணி அளவில் திருச்சி கலெக்டர் ஆபீசுக்கு தங்களுடைய தொண்டர்கள் புடைசூழ வந்தார். இவர் முன்பு செல்ல இவரது பின்னால் அ.தி.மு.க., தொண்டர்கள் சாரை,சாரையாக வந்து கொண்டிருந்தனர்.

இவர் மனுத்தாக்கல் செய்ய வரும்போது ஜெ., வை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் ஆனந்தும் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் நேருவும், தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தனர். இந்நேரத்தில் இருதரப்பு தொண்டர்கள் குவிந்திருந்ததால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜெ.., மனுத்தாக்கல் செய்ய கலெக்டர் ஆபீஸ் வளாகத்திற்குள் சென்ற போது, தி.மு.க.,வினர் அ.தி.மு.க.,வினரை நோக்கி செருப்பு வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருதரப்பும் பலத்த குரலில் கத்தியபடி மோதும் சூழல் ஏற்பட்டது. வன்முறை ஏதும் நிகழாமல் தடுக்க போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். தொடர்ந்து அங்கு பதட்டம் தொற்றிக்கொண்டது இருதரப்பினர் நடத்திய கல்வீச்சில் இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி மண்டை உடைந்தது. ரத்தம் சொட்ட, சொட்ட, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்திய, பாகிஸ்தான் அரையிறுதியில்!

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் சேர்த்தது.

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் வாட்சன் 25 ரன்களையும், ஹதீன் 53 ரன்களையும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் பான்டிங் அபாரமாக பேட் செய்து சதமடித்து, ஆஸ்திரேலிய அணியின் ரன் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தினார். 104 ரன்கள் குவித்த அவர், அஸ்வின் பந்துவீச்சில் ஜாகீர் கானிடம் கேட்ச் தந்து அவுட்டானார்.

மைக்கேல் கிளார்க் 8 ரன்களிலும், ஹஸ்சி 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒயிட் 12 ரன்களே எடுத்த நிலையில், பான்டிங்குக்கு உறுதுணையாக இருந்த ஹஸ்சி 38 ரன்கள் எடுத்தார். ஜான்சன் 6 ரன்கள் எடுத்தார்.

இந்திய தரப்பில் யுவராஜ் சிங், அஸ்வின், ஜாகீர்கான், ஹர்பஜன் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியின் ரன் எண்ணிக்கை ஓரளவு கட்டுப்படுத்தினர்.

அஸ்வின், ஜாகீர் கான், யுவராஜ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, பாகிஸ்தானை அரையிறுதியில் பலப்பரீட்சை காணவுள்ளது.

Wednesday, March 23, 2011

கூட்டனி கட்சிகளுடன் வேகத்துடன் களமிறங்கியது?

இன்று நல்ல நாள் என்பதால், தமிழக முதல்வர் கருணாநிதி, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டவர்களும், மற்ற வேட்பாளர்களும் இன்று மனு தாக்கல் செய்கின்றனர். அ.தி.மு.க., தலைமை ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி, அனைத்து அ.தி.மு.க., வேட்பாளர்களும் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.

மனு தாக்கலுக்கு, 26ம் தேதி கடைசி நாள். மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றை வாபஸ் பெற, 30ம் தேதி கடைசி நாள். எனவே, இறுதி வேட்பாளர் பட்டியல், 30ம் தேதி வெளியாகிறது. ஓட்டுப்பதிவுக்கு இன்னும், 20 நாட்கள் இருந்தாலும், ஏப்ரல் 11ம் தேதி பிரசாரத்தை முடிக்க வேண்டும். எனவே, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பின், பிரசாரத்துக்கு, 12 நாட்களே இருக்கும். அதற்குள் தலைவர்களது வருகை போன்ற வற்றில் கவனம் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும். எனவே, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்காக காத்திருக்காமல், இன்றே தீவிர பிரசாரத்தை துவக்க, வேட்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். அவ்வாறு பிரசாரம் செய்தாலும், ஒவ்வொரு தொகுதியிலும் வீடு வீடாக வாக்காளர்களை சந்தித்து, பிரசாரம் செய்வதற்கான அவகாசமும் குறைவாகவே உள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், நேற்றே தனது பிரசாரத்தை, திருவாரூரில் துவக்கிவிட்டார். இன்று வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு, தஞ்சாவூர், திருச்சியில் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்யவுள்ளார். ஸ்ரீரங்கம் தொகுதியில் இன்று, வேட்புமனு தாக்கல் செய்யும் ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையையும் வெளியிடவுள்ளார். தனது தொகுதியில் பிரசாரத்தைத் துவங்கும் அவர், தொடர்ந்து தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். தலைவர்களது பிரசாரம் மட்டுமன்றி, திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பிரசாரமும் இன்று முதல் துவங்குகிறது. முதல்வரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய அமைச்சர் அழகிரியும், துணை முதல்வர் ஸ்டாலினும் தான், தி.மு.க., கூட்டணி பிரசாரத்தை தோளில் சுமக்க உள்ளனர்.

காங்கிரசைப் பொறுத்தவரை, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன் போன்றோர் பார்லிமென்ட் கூட்டத் தொடரிலும் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால், விடுமுறை நாட்களில் தீவிர பிரசாரம் செய்ய உள்ளனர். அ.தி.மு.க., அணியில் உள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்களாக விஜயகாந்த், தா.பாண்டியன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் ஜெயலலிதாவுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட மனவருத்தங்களை சரிசெய்து, தொண்டர்களை தீவிர களப்பணியாற்ற வைக்க, இந்த ஒரே மேடை பிரசாரம் உதவும் என்று நிர்வாகிகள் நம்புகின்றனர்.

அறிமுக தொகுதி, தேர்தல் அதிகாரி / தொடர்பு எண்

* தொகுதி பெயர் : வானூர் (தனி)

* தொகுதி எண் : 73

* அறிமுகம் : 1957-ம் ஆண்டு முதல் தனி தொகுதியாக இருந்து தற்போதும் அதே நிலையில் நீடிக்கிறது.

* எல்லை :

மறுசீரமைப்பில் சிறிதளவு உருமாறிய வானூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கண்டமங்கலம் ஒன்றியத்தில் 33 ஊராட்சிகள்

சேர்க்கப்பட்டுள்ளன. வானூர் ஒன்றியத்தில் 65 ஊராட்சிகள்,கோட்டக்குப்பம் பேரூராட்சியில் 18 வார்டுகள் மாற்றமின்றி வானூர் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இந்தத் தொகுதியில் இருந்த மரக்காணம் பேரூராட்சி மற்றும் சில ஊராட்சிகள்

திண்டிவனம் தொகுதியில் இணைக்கப்பட்டுவிட்டன.
* தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

÷÷பேரூராட்சி: 1

கோட்டக்குப்பம் - 18 வார்டுகள்

ஊராட்சிகள்: 98

கண்டமங்கலம் ஒன்றியம் (33): ஆழியூர், சின்னபாபுசமுத்திரம், கலித்திரம்பட்டு, கலிஞ்சிகுப்பம், கண்டமங்கலம், கொடுக்கூர், கோண்டூர், கொங்கம்பட்டு, கிருஷ்ணாபுரம், கொத்தம்பாக்கம், வி.மாத்தூர், மிட்டாமண்டகப்பட்டு, முட்ராம்பட்டு, நவமால்காப்பேர், நவமால்மருதூர், நெற்குனம், பக்கிரிபாளையம், பாக்கம், பள்ளிநெளியனூர், பள்ளிபுதுப்பட்டு, பள்ளிதென்னல், பெரியபாபுசமுத்தரம், ராம்பாக்கம், சேஷாங்கனூர், சித்தலம்பட்டு, சொரப்பூர்,சொர்னாவூர்மேல்பாதி,சொர்னாவூர் கீழ்பாதி, திருமங்கலம்,தாண்டவமூர்த்திக்குப்பம்,வாதானூர்,வழுதாவூர், வீராணம்.

வானூர் ஒன்றியம் (65): தென்கோடிப்பாக்கம், பேராவூர்,

நல்லாவூர், உலகபுரம், டி.பரங்கினி, உப்புவேலூர், கொமடிப்பட்டு, காயல்மேடு, கிளப்பாக்கம், காரட்டை, தலக்காணிகுப்பம், புதக்குப்பம், கொஞ்சிமங்கலம், கிளியனூர், கொந்தமூர்,

அருவாப்பாக்கம், தேற்குணம், முருக்கம், கீழ்கூத்தப்பாக்கம், தென்சிறுவளூர், ஆதனப்பட்டு, பெரும்பாக்கம், குன்னம்,

கரசானூர், எறையூர், நெமிலி, சிறுவை, ராவுத்தன்குப்பம், பொம்பூர், ஐவேலி, இளையாண்டிப்பட்டு, கோரைக்கேணி, பொன்னம்பூண்டி, திருவக்கரை, தொள்ளாமூர், கடகம்பட்டு, செங்கமேடு, வி.பரங்கினி, வி.புதுப்பாக்கம், சே.மங்கலம், ரங்கநாதபுரம், காட்ராம்பாக்கம்,வி.கேணிப்பட்டு, தைலாபுரம்,ஒழுந்தியாப்பட்டு,கொடூர், கழுப்பெரும்பாக்கம் வில்வநத்தம், கொழவாரி, மாத்தூர், நெசல், ஆப்பிரம்பட்டு, ராயபுதுப்பாக்கம், தூருவை, புளிச்சப்பள்ளம், வானூர், ஒட்டை, அச்சரம்பட்டு, கடபேரிக்குப்பம், இரும்பை,பொம்மையார்பாளையம், திருச்சிற்றம்பளம், பூத்தூரை, பெரம்பை,

நாராயணபுரம்

* வாக்காளர்கள் : ஆண் : 98,161 பெண் :96,348

திருநங்கைகள் : 6

மொத்தம் : 6 1,94,515

* வாக்குச்சாவடிகள் : மொத்தம் : 247

* தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண்:

÷ பூபதி, தனித் துணை வட்டாட்சியர் - 9442235190.

முதல்வருக்கு அல்வா கொடுத்த?

முதல்வர் கருணாநிதி, சென்னையிலிருந்து திருவாரூர் சென்றபோது, அவருக்கு, "பரங்கிப்பேட்டை அல்வா'வை முன்னாள் எம்.எல்.ஏ., மகன் கொடுத்தார். தி.மு.க., கூட்டணி தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் கருணாநிதி, இன்று காலை, சென்னையிலிருந்து காரில் திருவாரூர் சென்றார்.

வழியில் பல இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், முதல்வருக்கு கொடுக்க கொண்டு வந்த சால்வைகள் மற்றும் பூங்கொத்துக்கள் சோதனையிட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டது. பரங்கிப்பேட்டை நகர தி.மு.க., சார்பில், பு.முட்லூரில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ., சிவலோகம் மகன் சண்முகம், தான் கொண்டு வந்த, "பரங்கிப்பேட்டை அல்வா'வை கொடுக்க முயன்றார். பதறிப்போன பாதுகாப்புப் படையினர், அந்த பொட்டலத்தை பிரித்து சோதனை செய்த பின்னரே முதல்வரிடம் கொடுக்க அனுமதித்தனர்.

மன்மத ராசா புகழ், சின்னத்திரையில்

"திருடா திருடி" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயா சிங். அந்தபடத்தில் தனுஷூடன் இவர் ஆடிய "மன்மத ராசா..." பாடல் பட்டிதொட்டியெல்லாம் பரவியது. இந்தபடத்திற்கு பின்னர் நடிக்க வாய்ப்பு வரும் என்று காத்திருந்தார். ஆனால் மன்மத ராசா பாடல் மாதிரி ஒத்த பாட்டுக்கு ஆடத்தான் நிறைய வாய்ப்புகள் வந்தன. இருந்தாலும் அம்மணி அதனை மறுக்கவில்லை. வந்தவரைக்கும் லாபம் என்பது போல ஒத்தபாட்டுக்கு ஆடத் தொடங்கினார்.

மன்மத ராசாவை தொடர்ந்து, விக்ரமுடன் "அருள்" படத்தில் ஒரு பாடல், விஜய்யுடன் "திருப்பாச்சி" படத்தில் "கும்பிடபோன தெய்வம்..." என்று நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் பார்த்திபனுடன் "வல்லமை தாராயோ" படத்தில் நடித்தார். அதன்பின்னர் சிறிது இடைவெளிக்கு பின்னர் ஷங்கரின் "அனந்தபுரத்து வீடு" படத்தில் நடித்தார். தொடர்ந்து படவாய்ப்புகள் ஏதும் வராததால் சின்னத்திரையில் களம் இறங்கிவிட்டார். தமிழில் முன்னணி டி.வி., சானல் ஒன்றில் சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் நிறைந்த தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.

இதுகுறித்து சாயா சிங் கூறுகையில், சின்னத்திரையில் நடிக்க இருந்தது உண்மை தான். ஆனால் அது இவ்வளவு சீக்கிரமாக நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்ததொடரின் கதை மிகவும் பிடித்து இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

Tuesday, March 22, 2011

வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா குறைப்பு? பிரிட்டன்!

லண்டன்:உயர்கல்வி படிப்பதற்காக ஒவ்வொரு நாட்டிலிருந்தும் இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு மாணவர்கள் செல்வது வழக்கம். மேலும் அந்நாடுகளுக்கு செல்லும் மாணவர்கள் முறையானவிசா,முறையற்ற விசா மூலமும் செல்வதால் இரு நாடுகளிடையேயான உறவில் சிக்கல் எழுகின்றன. இதனை தவிர்ப்பதற்காக வழிமுறைகளை இங்கிலாந்து அரசு முயன்று வருகிறது.

உலகம் முழுவதிலும் இருந்து ஆண்டு தோறும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயர் கல்வி படிக்க இங்கிலாந்திற்கு வருகின்றனர். இந்த எண்ணிக்கையை குறைப்பதற்காக முதற்கட்டமாக வெளிநாட்டு மாணவர்களை கவர்ந்திழுக்கும் போலியான கல்வி நிறுவனங்களை அடையாளம் காணப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு மாணவர்களில் ஏழு பேரில் ஒருவர் போலியான கல்விநிறுவனங்களில் பயின்று வருகின்றனர் என ஆய்வுஒன்று தெரிவிக்கிறது.

மேலும்வெளிநாட்டிலிருந்து வரும் மாணவர்களுக்கு ஆங்கில அறிவு கட்டாயமாக இருக்க வேண்டும் என்பது. வெளிநாட்டு மாணவர்களில் குறிப்பாக சீனா, இந்தியா போன்ற நாட்டில் இருந்து செல்லும் மாணவர்களின் ஆங்கில அறிவு குறைவுகாரணமாக இங்கிலாந்து மாண வர்களுடன் ஒன்று சேர முடியாமல் அவர்களுடன் பழக முடியாமல் தனித்து விடப்படுகின்றனர். இதனால் இன வெறி போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாக விசா வழங்கும் படிவத்தில் ஆங்கில அறிவு கட்டாயம் என்ற விதியை சேர்க்கும் பட்சத்தில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் திருமணம் அடுத்த மாதம் 29-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு அல்காடெல் நிறுவனம் சிறப்பு செல்போனையும் ஜி.ஈ. நிறுவனம் சிறப்பு குளிர்சாதன பெட்டியையும் விற்பனைக்கு விடுகின்றன.

இளவரசர் வில்லியம்ஸýக்கும் கேட் மிடில்டனுக்கும் ஏப்ரல் மாதம் 29-ம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற உள்ளது. இவர்களது திருமணத்தை முன்னிட்டு அல்காடெல் நிறுவனம் சிறப்பு செல்போன் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. 

அந்த செல்போனின் திரையில் இளவரசர் வில்லியம் மற்றும் மணமகள் மிடில்டன் ஆகியோரது படங்கள் இருக்கும். அதில் திருமண நாளைக் குறிக்கும் வகையில் ஏப்ரல் - 29 என்று பொறிக்கப்பட்டிருக்கும். இதன் விலை ரூ. 1100 ஆக இருக்கும். இதே போல் ஜி.ஆர். நிறுவனம் பிரிட்ஜ் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு விடவுள்ளது. அந்த பிரிட்ஜின் வெளிப்பகுதியில் திருமணத் தம்பதியரின் படம் பொறிக்கப்பட்டிருக்கும். இதை அந்த நிறுவனத்தின் வர்த்தக பிரிவு இயக்குநர் டேவிட் கார்டன் தெரிவித்துள்ளார்.

சொன்னதை செய்வோம்! சொல்லாததையும் செய்வோம்?

வாஷிங்மெஷின், பிரிட்ஜ் ஆகியவற்றை முதல்வர் கலைஞர் வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என, மு.க.ஸ்டாலின் பேசினார்.

துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் திருப்பூர் அல்தாப் போட்டியிடுகிறார். துறைமுகம் இந்திய முஸ்லீம் லீக் வேட்பாளரை ஆதரித்து செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், 2006ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையின் வாக்குறுதிகள் அனைத்து வாக்குறுதிகளையும் முதல்வர் கலைஞர் நிறைவேற்றியுள்ளார்.

தற்போது தேர்தல் அறிக்கையில் கிரைண்டர் அல்லது மிக்ஸி அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு எப்போதும் சொன்னதையும் செய்யும், சொல்லாததையும் செய்யும். வாஷிங்மெஷின், பிரிட்ஜ் ஆகியவற்றை முதல்வர் கலைஞர் வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் மக்கள் மத்தியில் நம்பிக்கை வந்துள்ளது என்றார்.

பற்களை பாதுகாக்கலமா!

பல் போனால் சொல் போச்சு என்று சொல்வார்கள். உண்மைதான்… வாயில் வரிசையாக பற்கள் இல்லாவிட்டால், சுத்தமான பேச்சு வராது. அதேபோல், முக அழகை பேணிக்காப்பதிலும் பற்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பற்கள் விழ ஆரம்பித்துவிட்டால் அழகும் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட ஆரம்பித்துவிடும்.

சிலர் வாயைத் திறந்தாலே கப்பென்று ஒரு வாடை அடிக்கும். அவர்கள் சரியாக பல் துலக்காததுதான் அதற்கு காரணம். பற்களை முறையாக பராமரிக்காவிட்டால், பல் சொத்தையாவதோடு பல நோய்களும் அடிக்கடி வந்து தொல்லை செய்யும். அதனால், பற்களை தகுந்த முறையில் பேணிக்காப்பது அவசியமாகிறது. அதற்கு என்ன செய்யலாம்? குழந்தைப் பருவம் முதலே பற்களை முறையாக சுத்தம் செய்துவர வேண்டும். தினமும் இரண்டு வேளை பல் துலக்கவும், சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிக்க வேண்டும்.

சிலருக்கு சின்ன வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால் அவர்களது முக அமைப்பே மாறிவிடும். குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே இதற்கு முக்கிய காரணம். பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும்போது பற்களின் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடைறாக இருப்பதால் பற்கள் தங்கள் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பித்து விடுகின்றன. அதனால், 3 முதல் 4 வயது வரை உள்ள குழந்தைகள் விரல் சூப்பினால் பரவாயில்லை. அதற்கு மேல் அந்தப் பழக்கத்தை அனுமதிக்கக் கூடாது.

நம்மில் பலர் பல் துலக்கும்போது இன்னொரு பெரிய தவறையும் தெரியாமல் செய்துவிடுகிறோம். அதாவது, பற்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பல் ஈறுகளுக்கு கொடுக்க மறந்துவிடுகிறோம். ஈறுகளுக்கும், பற்களுக்கும் இடையில் உள்ள சின்ன இடைவெளிகளில் நாம் சாப்பிடும் பொருட்கள் தங்குவதுதான் ஈறு தொடர்பான பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது. குழந்தை பருவத்தில் இருந்தே, பல் ஈறுகளுக்கு இடையிலும் சுத்தம் செய்வது எப்படி என்று கற்றுக்கொடுத்தால் பிற்காலத்தில் ஏற்படும் அவதியை தவிர்க்கலாம்.

இலவச வெப்சைட் பேக்கேஜ்!

சென்னை : புதிய வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்க்கும் பொருட்டு, தங்கள் நிறுவனத்தின் சேவையை புதிதாக பெறும் வாடிக்கையாளர்களுக்கு இலவச வெப்சைட் பேக்கேஜை வழங்க திட்டமிட்டிருப்பதாக ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் ( 3ஜி சேவை பிரிவு) உயர் அதிகாரி பிரசாந்த் கோகர்ன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இந்தியாவில், 2013ம் ஆண்டிற்குள், இணையதளத்தில் உலவுபவர்களின் எண்ணிக்கை 8 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆனால், தற்போதைய அளவில் இந்தியாவில் 8 லட்சம் இணையதளங்களே புழக்கத்தில் உள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்த பெரும்பாலும் இணையதளங்களை நாடுகின்றன. அவர்களுக்கு சேவை செய்யும் விதமாக, தங்கள் நிறுவனம், நெட்கனெக்ட் சேவையை புதிதாக பெறும் வாடிக்கையாளர்களுக்கு இலவச வெப்சைட் பேக்கேஜை ஒரு ஆண்டிற்கு இலவசமாக வழங்குகிறது.

இந்த பேக்கேஜின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப டொமைன் நேமை பெற்றுக்கொள்ளலாம். அதோடுமட்டுமல்லாமல், ஹோஸ்டிங் மற்றும் பிசினஸ் இ-மெயில் அக்கவுண்ட் வசதிகளுடன் கூடிய ‌வெப்சைட்டை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புடன், அவர்களுக்கு தேவையான உதவிகளையும் நாங்கள் இலவசமாக ஒரு ஆண்டிற்கு வழங்க உள்‌ளோம். இதற்காக, வெப் ஹோஸ்டிங் சேவைகள் வழங்குவதில் முன்னணி நிறுவனமாக உள்ள பிக்ராக்குடன் கைகோர்த்துள்ளோம். இதன்மூலம், எங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் உயரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!