ஆறாவது முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் சச்சினுக்காக, அனைவரும் இணைந்து சாம்பியன் கோப்பை வெல்ல முயற்சிப்போம்,'' என்று இந்திய அணியின் துவக்க வீரர் காம்பிர் கூறினார்.
உலக கோப்பை கிரிக்கெட் வரும் பிப்., 18ம் தேதி வங்கதேசத்தில் துவங்குகிறது. முதல் போட்டி பிப்., 19ல் தாகாவில் நடக்கிறது. இதில் "பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் போட்டியில், வங்கதேசத்தை எதிர்த்து களமிறங்குகிறது. இதற்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் இடம் பெற்ற துவக்க வீரர் காம்பிர், உலக கோப்பை தொடர் குறித்து கூறியது:
ஆறாவது உலக கோப்பை தொடரில் சச்சின் பங்கேற்கிறார். இது அவரது கடைசி <தொடராக இருக்கும் என்று நான் எண்ணவில்லை. அவர் மீண்டும் ஒரு தொடரில் பங்கேற்க வேண்டும். எண்ணற்ற சாதனைகளை படைத்த அவருக்காக, இந்திய வீரர்கள் அனைவரும் இணைந்து, இம்முறை உலக கோப்பை வெல்ல முயற்சிப்போம். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் ஏற்பட்ட காயத்தால் நாடு திரும்பினேன். ஆனால் உலக கோப்பை தொடருக்கு முன், முழுமையாக தயாராகி விடுவேன். என்னைப் போன்று மற்றவர்களும், சிறப்பாக ரெடியாகி விடுவார்கள்.
சிறந்த வீரர்:
தற்போதுள்ள வீரர்களில் கடுமையாக போராடுபவர் யுவராஜ் சிங். இவர் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்தக் கூடியவர். இத்தொடரில், எல்லோரும் கவனிக்கத்தக்க வீரராக இவர் இருப்பார் என்று நம்புகிறேன்.
கங்குலிக்கு வரவேற்பு:
ஐ.பி.எல்., அணி உரிமையாளர்கள் என்மீது இவ்வளவு ஆர்வமாக இருப்பார்கள் என்று நினைக்கவே இல்லை. என்னால் முடிந்த அளவு 100 சதவீதம் சிறப்பான ஆட்டத்தை, கோல்கட்டா அணிக்காக வழங்கத் தயாராக உள்ளேன். இந்த அணியின் தலைமை ஆலோசகர் பதவியில் முன்னாள் கேப்டன் கங்குலி வந்தால் மகிழ்ச்சி அடைவேன். இவர் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் எப்போதும் தொடர்ந்து விளையாட முடியாது. என்றாவது ஒருநாள் ஓய்வு பெறத்தான் வேண்டும். கோல்கட்டா அணியின் ஒரு அங்கமான கங்குலி, நாங்கள் கோப்பை வெல்வதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார் என்று உறுதியாக நம்புகிறேன்.
மீண்டும் கேப்டன்:
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சக வீரர்கள், 100 சதவீதம் திறமை வெளிப்படுத்த விரும்பினேன். அதேபோல நடந்ததால் தொடரை முழுமையாக வெல்ல முடிந்தது. அனைத்து வீரர்களும் இந்திய அணிக்கு கேப்டனாக விரும்புவர். கேப்டன் பொறுப்பை ஏற்க மீண்டும் ஆர்வமாக உள்ளேன். ஆனால், தற்போதைய கேப்டன் தோனி சிறப்பாக அசத்தி வருகிறார். இவரையும் சச்சினையும் ஒப்பிட முடியாது. மற்றபடி இருவரும் சிறந்த வீரர்கள்.
மற்ற போட்டிகளை விட, டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதில் தான் அதிக ஆர்வமாக உள்ளேன். ஏனெனில் இதில் தான் தங்களது முழுத்திறமையும் வெளிப்படுத்தி, பெரிய அளவில் பிரகாசிக்க முடியும்.
இவ்வாறு காம்பிர் கூறினார்.





0 comments:
Post a Comment